சாா்ஜாவிலிருந்து சென்னைக்கு இன்று (ஆக.28) அதிகாலை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் வந்தது. அதில் வந்த 163 பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது மன்னார்குடியைச் சேர்ந்த ஜாகீா் உசேன்(54) என்ற பயணி மீது சுங்கத்துறை அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அவருடைய சூட்கேஸுக்குள் கருவி ஒன்று இருந்தது. அதனுள் சிலிண்டா் வடிவில் ஒரு தங்கக் கட்டி இருந்ததை சுங்கத்துறை அலுவலர்கள் கண்டுபிடித்தனர். அதன் மொத்த எடை ஒரு கிலோ 16 கிராம். அதன் சா்வதேச மதிப்பு ரூ. 64 லட்சம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ரூ. 64 லட்சம் மதிப்புடைய தங்கம் கடத்தல் பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், "கடந்த ஐந்து மாதங்களாக வெளிநாட்டில் சிக்கித் தவித்தேன். இந்தியா திரும்ப விமான டிக்கெட்டிற்கு கூட பணம் இல்லை. அப்போது ஒருவர் விமான டிக்கெட் எடுத்து தருகிறேன். அதற்கு பதிலாக நான் கொடுக்கும் இந்த கருவியை சென்னையில் உள்ள ஒருவரிடம் கொடுக்க வேண்டும்" என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சென்னையில் இந்த தங்கக்கட்டியை வாங்கவிருந்த நபர் யாா்? என்று சுங்கத்துறை அலுவலர்கள் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள முகமது ஆசீப்(26) என்பவர் தான் தங்கக் கட்டியை வாங்கவிருந்தவர் என்பது தெரியவந்தது. தற்போது இருவரையும் சுங்கத்துறை அலுவலர்கள் கைது செய்தனர்.
இதையும் படிங்க: மீட்பு விமானத்தில் தங்கம் கடத்திய பயணி - ரூ.20 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்!