தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பஞ்சலோக சிலைகளை வாங்குவது போல் நடித்து கடத்தல் கும்பலை மடக்கிப்பிடித்த போலீஸ்!

தமிழ்நாட்டு கோயிலில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தத் திட்டமிடப்பட்ட இரு பஞ்சலோக சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் மீட்டு அதைக் கடத்திய கடத்தல்காரர்களை கைது செய்துள்ளனர்.

பஞ்சலோக சிலைகளைக் கடத்திய கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..!
பஞ்சலோக சிலைகளைக் கடத்திய கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..!

By

Published : Jun 24, 2022, 10:20 PM IST

சென்னை:பழங்கால கோயில்களில் இருந்து திருடி வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்பட்ட புராதனச்சிலைகளை மீட்க தமிழ்நாடு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்

இந்நிலையில், விருதாச்சலம் பகுதியில் உள்ள ’மகிமைதாஸ்’ என்பவரது வீட்டில் இரு பஞ்சலோக சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. மேலும், காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ’மகிமைதாஸ்’ சிலைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

மேலும், அந்நபரின் வீட்டில் 1 3/4 அடி உயரமுள்ள ஐந்து தலை நாகத்துடன் கூடிய மாரியம்மன் சிலை மற்றும் சுமார் 1 அடி உயரமுள்ள பெருமாள் சிலை இருப்பதும், அச்சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்த அல்லது விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ளதும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்குத் தெரியவந்தது.

கடத்தல் கும்பலைச் சேர்ந்த மற்றொரு நபர்

மேலும், சிலைகளை வாங்கும் நபர்களைக் கடத்தல் கும்பல் தேடி வருவதாகவும் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, காவலர்கள் விலை உயர்ந்த பழங்காலச் சிலைகளை வாங்குபவர்கள் மற்றும் சேகரிப்பவர்கள் போல் நாடகமாடி,நடித்து, கடத்தல் கும்பலைத் தொடர்புகொண்டனர்.

சுமார் ரூ.2 கோடி வரை பேரம் நடத்திய பின் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ’மகிமைதாஸ்’ சிலைகளை வாங்க வருபவர்கள் போல் நடித்த தனிப்படை காவல் துறையினரை சந்திக்க முன்வந்தார். அந்த நேரத்தைப் பயன்படுத்தி சிலைக் கடத்தல் நபரான மகிமைதாஸ் என்பவரை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுப் காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து சிலைகளை மீட்டனர்.

அதனைத்தொடர்ந்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் மகிமைதாஸிடம் கேற்கொண்ட விசாரணையில், விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த மகிமைதாஸின் கூட்டாளி பச்சமுத்து என்பவரால் தமிழ்நாடு கோயிலில் இருந்து பழங்கால வெண்கல சிலைகள் இரண்டு திருடப்பட்டதும், அதன் பின் வெளிநாடுகளுக்கு கடத்த அல்லது விற்பனை செய்வதற்காக மகிமைதாஸிடம் கைமாறியதும் தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து, மகிமைதாஸ் அளித்த தகவலின் அடிப்படையில், அவனது கூட்டாளியான பச்சமுத்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் வைத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிலைகள் கடத்தப்பட்ட கோயில் தொடர்பாகவும், சிலைகளின் தொன்மை தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், சிலைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மீதமுள்ள நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'நாங்க போவோம்.. இல்ல பாய விரிச்சி இங்கேயே படுப்போம்..' - அதகளம் செய்த போதை ஆசாமிகள்!

ABOUT THE AUTHOR

...view details