சென்னை:சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில், பெரிய அளவில் தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து, சுங்க அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், மலேசிய நாட்டு தலைநகர், கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏசியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (டிச.13) வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதித்தனர். அப்போது, மலேசிய நாட்டைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவரின், உடைமைகளை சோதித்த போது, அவருடைய பையில் துளையிடும் ட்ரில்லிங் மெஷின் (Drilling Machine) ஒன்று இருந்தது.
சந்தேகத்தில் அதை கழற்றிப் பார்த்தபோது, அதனுள் 3 தங்க உருளைகள் இருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 3.49 கிலோ கொண்ட இதன் சர்வதேச மதிப்பு ரூ.1.88 கோடி. இதை அடுத்து, சுங்க அதிகாரிகள் தங்க கட்டிகளை பறிமுதல் செய்து, மலேசியா நாட்டை சேர்ந்த கடத்தல் பயணியை கைது செய்தனர்.