சென்னை: துபாயில் இருந்து இண்டிகோ மற்றும் ஃபிளை துபாய் ஆகிய 2 பயணிகள் விமானங்கள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த 2 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களின் உடைமைகளை சோதனையிட்டனர். உடைமைகளில் பழைய லேப்டாப்புகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தன.
சந்தேகத்தில் அவைகளைப் பிரித்து பார்த்தபோது வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்களிலும், லேப்டாப்களிலும் சிறுசிறு தங்க துண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இரண்டு பயணிகளிடம் இருந்தும் மொத்தம் ஒரு கிலோ 57 கிராம் எடையுள்ள தங்கத் துண்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவைகளின் சர்வதேச மதிப்பு ரூ.57.76 லட்சம் ஆகும். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் இரண்டு பயணிகளையும் கைது செய்தனர்.