சென்னை தலைமைச்செயலகத்தில் மின் ஊழியர்கள் சங்கத்தினைச் சார்ந்தவர்கள் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார். அவர்கள் 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “100 யூனிட் மின்சாரம் இலவசமாகவும், 100 யூனிட்டுக்கு மேல் 200 யூனிட்டுக்குள் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மானியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசிற்கு 3ஆயிரத்து 496 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படுகிறது.
100 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை வேண்டாம் என்று வீட்டாளர்கள் விரும்பினால், கணக்கீட்டாளர்கள் அளிக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வழங்கலாம். புதைவிட கம்பிகள் அமைக்கும் பணி ஆயிரத்து 200 கோடி ரூபாயில் நடைபெற்று வருகிறது.
பருவ மழைக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதோடு, தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடுகளில் மின் கணக்கிடுவதை எளிமையாக்கும் வகையில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மீட்டர்கள் கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
விரைவில் டெண்டர் கோரப்பட்டு இறுதிசெய்தபின், வீடுகள்தோறும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு, மாதம்தோறும் மின் கணக்கீடு செய்யும் பணி தொடங்கப்படும். நிலக்கரி தற்போது 143 டாலருக்கு கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை உயர்த்தி 203 டாலருக்கு கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. குறைந்தபட்சம் 10 விழுக்காடு நிலக்கரியை ஒன்றிய அரசிடம் இருந்து கட்டாயம் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உள்ளது” என்றார்.
இதையும் படிங்க:அதிமுக தலைமை அலுவலக சாவியை ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு