சென்னை:தமிழ்நாட்டில் முதன்முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பத் திட்டம் சென்னை போக்குவரத்து காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் விரைவில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் எம் சைரன் போர்டு வரப்போவதாக போக்குவரத்து கூடுதல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் இத்திட்டத்தினை ஈகா திரையரங்கம் சிக்னல் அருகில், Smart Ambulance Traffic Facilitation System-ஐ துவக்கி வைத்தார்.
மேலும், போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் திட்டத்தில் தொழில் கருவி முன்னேற்றத்திற்காக தனியார் மருத்துவமனைகள், போக்குவரத்து மற்றும் காவல்துறை ஆகியவை இணைந்து ஜிபிஎஸ் கருவி மூலமாக சைரன் போர்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆம்புலன்சில் இருக்கும் சைரன்களுக்கு ஸ்மார்ட் சைரன் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 40 இடங்களில் 3 மருத்துவமனைகளை உள்ளடக்கிய 25 ஆம்புலன்ஸ்கள் 16 போக்குவரத்து சந்திப்புகளைச் சேர்த்து ஜிபிஎஸ் கருவி மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. இச்சேவை சென்னையில் உள்ள 40 சந்திப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 200 மீட்டர் தூரத்திற்கு முன்பாக வரக்கூடிய ஆம்புலன்ஸ் ஜங்ஷனில் இருக்கக்கூடிய சைரன் போர்டில் தெளிவுபடுத்தி எந்தச் சாலை வழியாக ஆம்புலன்ஸ் வருகிறது என்பதைக் காட்டும்.
உடனடியாக போக்குவரத்துக் காவலர்கள் அந்தச் சாலையை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சரி செய்து வாகனத்தை அனுப்புவார்கள். இதில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளும் இணைய இருக்கிறார்கள். குறிப்பாக நம்முடைய நோக்கம் 108 ஆம்புலன்ஸ் இந்தச் செயலியில் வரவேண்டும் என்ற நோக்கத்திற்கான முயற்சிகளை அரசு எடுத்துக்கொண்டிருக்கிறது. மிக விரைவில் 108 ஆம்புலன்ஸ் இந்த சைரன் போர்டு கருவியுடன் இணைய வாய்ப்பு உள்ளது.