சென்னை:நந்தனம் மூப்பனார் மேம்பாலம் அருகே 96 சென்டில் நியூ டவர் என்ற பெயரில் புதியதாக 17 அடுக்குமாடிகள் கொண்ட 102 வீடுகள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, ’நியூ டவர் என்ற பெயரில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப்பணிகள் 90 சதவிகிதம் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 10 சதவிகிதப் பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு வீடுகள் வாங்கியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
1300 சதுர அடி முதல் 1600 சதுர அடி வரையில் கட்டப்பட்டுள்ள இந்த ஒவ்வொரு வீடும் 1 கோடியே 38 லட்சம் முதல் 1 கோடியே 50 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட 61 இடங்களில் உள்ள வாடகை குடியிருப்புகள் பழுதடைந்து உள்ளதாகவும், அந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு அதிக வீடுகள் கொண்ட நவீன மாடி குடியிருப்புகளாக தற்போதைக்கு ஏற்ற வகையில் கட்டித்தரப்படும்.