சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலட்சுமி கோயிலில் அர்ச்சகராக இருப்பவர், சேஷாத்ரி. 1990-லிருந்து அங்கு பணியாற்றி வரும் இவருக்கு வயது தற்போது 59. இவர் தற்காப்புக் கலைகளான கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட கலைகளைப் பயின்று தற்போதும் பயிற்சி எடுத்துள்ளார். குறிப்பாக, கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கி உள்ளார். மேலும் தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்ள வயது தடை இல்லை எனச் சொல்கிறார், அறுபது வயதை நெருங்கும் சேஷாத்ரி.
சேஷாத்ரிக்கு சிறுவயது முதலே சிலம்பம், கராத்தே உள்ளிட்ட கலைகள் மீது ஆர்வம் இருந்துள்ளது. இதற்கு அவருடைய தந்தை ஒத்துக் கொள்ளாத காரணத்தினால், மறைமுகமாக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். சிறுவயதில் இருக்கும்போது எம்ஜிஆர் படங்களைப் பார்த்து சிலம்பம் கற்றுக் கொள்ள சேஷாத்திரிக்கு விருப்பம் ஏற்பட்டுள்ளது. பின்னர், சிலம்பம் கற்றுக்கொள்ள அடிக்கடி தன்னுடைய பணிகளிலிருந்து விடுப்பு எடுத்து கற்றுக்கொண்ட நமது சேஷாத்ரி, புரூஸ் லீ படத்தைப் பார்த்து கராத்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை பிறந்ததாகப் பூரிக்கிறார்.
இதைப்பற்றி பலமுறை தனது வீட்டில் சொன்ன போது, சண்டை போன்ற கலைகளை கற்றுக்கொள்ள வேண்டாம் என்று சேஷாத்திரியின் பெற்றோர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். பின்னாளில் தனக்குத் திருமணம் நடந்த பிறகு, விடாமுயற்சியாக சிலம்பம், கராத்தே ஆகியவற்றை கற்றுக் கொண்டுள்ளார். தொடர்ச்சியாக, ஏழு ஆண்டுகள் கராத்தே கற்றுக் கொண்டு, கராத்தேவில் உள்ள நான்காம் நிலை பிளாக் பெல்ட்டை வாங்கியுள்ளார். இதைப்பற்றி செய்திகள் பத்திரிகையில் வந்ததைத் தொடர்ந்து, அதனைக் கண்ட அவரது தந்தை பாராட்டியுள்ளார். அன்றிலிருந்து கலைகளை வீட்டில் பயின்று வந்துள்ளார்.