வண்டலூர் அடுத்த கண்டிகையில் உள்ள தனியார் பொறியல் கல்லூரியில் வெளிநாட்டுகளில் இருந்து விமானம் மூலம் வந்த 100- க்கும் மேற்பட்டோர் தனிமைபடுத்தபட்டுள்ளனர். இதனையடுத்து மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய முதியவர் ஒருவரும் இரண்டு நாட்களுக்கு முன்னர் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் வழக்கமாக உட்கொள்ளும் மருந்து வழங்காததால் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முதல் அதற்கான மருத்துகளை வழங்குமாறு முதியவர் கேட்டுள்ளார்.
மேலும் தா.மு.மு.க அமைப்பு மூலமாக மருந்து வாங்கி அவர்களும் வெளியே காத்திருந்த நிலையில், கரோனா காரணமாக மருந்து உள்ளே அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் முதியவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு கழிவறையில் ரத்த வாந்தியெடுத்த நிலையில் உயிரிழந்தார்.
இதையடுத்து சரியான சிகிச்சை அளிக்காததே உயிரிழப்பிற்கு காரணம் என மத்திய ,மாநில அரசுகளை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், அரசு அலுவலர்களை முறையான நடவடிக்கையெடுக்கவில்லை என விமர்சனம் செய்து கோஷமிட்டனர்.
இதனால் அப்பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். பின்னர் தகவலறிந்து வந்த காவல் துறை உயர் அலுவலர்கள் மற்றும் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் முஸ்லிம் அமைப்பின் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் . ஆனால் வருவாய் ஆய்வாளர், அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்கப்போவதில்லை எனக் கூறியதோடு, இது குறித்து முறையிட மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளதாகவும் முஸ்லிம் அமைப்பினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கல்ல பெருநிறுவங்களுக்குதான் லாபம்: சட்டத்திருத்தத்தால் விவசாயிகள் குமுறல்!