சென்னை:தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாணவர்கள் பெற்றுவருகின்றனர். இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “மருத்துவத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 22ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன.
மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் இதுவரை 16ஆயிரத்து 866 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 8 ஆயிரத்து 659 மாணவர்கள் விண்ணப்பங்களை முழுவதும் பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் விண்ணப்பங்களை மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக அனுப்பி வைக்க வேண்டும்.
மற்ற மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் போதுமானது. இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு அக்டோபர் 3ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.