அண்ணா பல்கலைக்கழகத்தில் 2018ஆம் கல்வியாண்டில் நவம்பர் பருவத்தேர்வு எழுதிய மாணவர்களில் ஆறு தனியார் கல்லூரிகளில் படித்த மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னர் ஆண்டு தோறும் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, தேர்ச்சி விழுக்காடு ஆகியவை வெளியிட வேண்டும் என நீதிமன்ற உத்தரவு உள்ளது. அதன் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன், பி.இ, பி.டெக். பட்டப்படிப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைக்கல்லூரிகள், தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதம் மற்றும் நவம்பர், டிசம்பர் மாதம் நடைபெற்ற பருவத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரத்தினை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், 2018ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைக் கல்லூரிகளில் இருந்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்:
- மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் 3,317 பேர் தேர்வு எழுதியதில் 2,461 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- கிண்டி பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுதிய 4,721 மாணவர்களில் 3,407 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியில் 1,985 பேர் தேர்வு எழுதியதில் 1,361 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பி.இ, பி.டெக். பட்டப்படிப்பினை நடத்தும் தன்னாட்சி பொறியியல் 30 கல்லூரிகளில் நாமக்கல் விவேகானந்தா பெண்கள் பொறியியல் கல்லூரியின் மாணவிகள் 89.59 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். கடைசியாக நாமக்கல் முத்தையாம்மாள் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 43 விழுக்காடு தேர்ச்சி பெற்று கடைசி இடத்தினை பிடித்துள்ளனர்.
அதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் சேலம் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஹேண்ட்லூம் டெக்னாலாஜி 88.12 விழுக்காடு தேர்ச்சி பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.கல்லூரி 85.12 விழுக்காடு பெற்று இரண்டாம் இடத்தையும், நாமக்கல் விவேகானந்தா இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலாஜி மகளிர் கல்லூரியில் 81.65 விழுக்காடு பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற 481 கல்லூரிகளில் 58 பொறியியல் கல்லூரிகளில் படித்து தேர்வு எழுதிய மாணவர்களில் 50 விழுக்காட்டிற்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர். 50 விழுக்காடு முதல் 25 விழுக்காடு வரையில் 187 கல்லூரியில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 25 முதல் 10 விழுக்காடு வரையில் 171 கல்லூரியில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 74 பொறியியல் கல்லூரியில் படித்த மாணவர்களில் 10 விழுக்காட்டிற்கு குறைவாகவே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் ஒரு சில கல்லூரிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் ஒரிருவர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், 5 விழுக்காடு கீழ் 27 கல்லூரிகளில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரியலூர் கே.கே.சி.பொறியியல் கல்லூரி, தஞ்சாவூர் எஸ்.எம்.ஆர் ஈஸ்ட் கோஸ்ட் பொறியியல் கல்லூரி, திண்டுக்கல் அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரி, கன்னியாகுமரி தமிழன் பொறியியல் கல்லூரி, பெரம்பலூர் எலிசபெத் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் ஸ்டெடிவோல்ட் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் படித்து தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.