சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த குற்றஞ்சாட்டினால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி நடத்திய விசாரணையில் விக்னேஷ் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்ததையடுத்து கொலை வழக்காகப் பதிவு செய்து காவலர் பவுன்ராஜ், ஊர்காவல் படையைச் சேர்ந்த தீபக், தலைமைக் காவலர் எழுத்தர் முனாப், குமார், சந்திரகுமார், ஜெகஜீவன் ஆகிய 6 பேரை சிபிசிஐடி காவல்துறை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட காவலர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை நேற்று (ஜூலை 12) நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாகன சோதனையின் போது, விக்னேஷிடம் ஆயுதம், கஞ்சா இருந்ததாகவும், காவலர்களை பார்த்ததும் அவர் தப்பியோடியபோது, கீழே விழுந்து படுகாயம் அடைந்ததாகவும், இந்த காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதாகவும், காவல்துறையினர் தாக்கியதால் மட்டும் விக்னேசுக்கு காயம் ஏற்படவில்லை என வாதிட்டார்.