குஜராத் துறைமுகத்தில் கப்பல் வழியாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கடந்த 18ஆம் தேதி வருவாய் நுண்ணறிவுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் முந்த்ரா துறைமுகத்தில் முகத்துக்குப் பூசும் பவுடர் கொண்டுவரப்பட்ட இரண்டு கண்டெய்னர்களில் மூன்றாயிரம் கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.
அவற்றைப் பறிமுதல்செய்து ஆய்வு செய்தபோது, இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் 21 ஆயிரம் கோடி ரூபாய் எனத் தெரியவந்தது. அந்தப் போதைப்பொருளை அனுப்பிய நபர்கள் யார் என விசாரணை நடத்தியபோது, விஜயவாடாவில் இயங்கிவரும் நிறுவனத்தின் பெயரில் ஆப்கானிஸ்தானிலிருந்து, முந்த்ரா துறைமுகத்திற்கு வந்தது தெரியவந்தது.
மேலும் போதைப்பொருளை டெல்லிக்குக் கடத்த முற்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஜிஎஸ்டி பெயரை வைத்து விசாரித்தபோது சென்னையைச் சேர்ந்த தம்பதியான மச்சாவரம் சுதாகர், வைஷாலி ஆகியோர் இந்நிறுவனத்தை நடத்திவந்தது தெரியவந்தது.
பிறகு செங்கல்பட்டு மாவட்டம் கொளப்பாக்கத்தில் வைஷாலியின் தந்தை வீட்டில் பதுங்கியிருந்த இருவரையும் கைதுசெய்து, குஜராத் முந்த்ரா நீதிமன்றத்தில் முன்னிறுத்தி 10 நாள்கள் காவலில் எடுத்து வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் விசாரணை நடத்திவருகின்றனர்.