தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை கடந்த மாதம் டெல்லியில் சந்தித்து புதிதாக ஆறு மருத்துவக் கல்லுரிகளை தொடங்க அனுமதி கோரி மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக மாவட்ட தலைமை மருத்துவமனையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிற்குள் 20 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து, அதற்குரிய அனுமதியுடன் மத்திய அரசுக்கு மருத்துவக் கல்வி இயக்குனரகம் திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்தது.
மாநிலம் முழுவதும் ஆறு மருத்துவக் கல்லூரிகளைப் புதிதாகத் தொடங்க தமிழ்நாடு அரசு சார்பில் கோரப்பட்ட அனுமதியை மத்திய அரசி பரிசீலித்து வருவதாகப் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு இன்று அனுமதியளித்துள்ளது.