உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை, மருத்துவத் துறை, மாநகராட்சி, காவல் துறை என அனைவரும் இணைந்து தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் காவலர்கள் தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக சென்னை, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர்கள் இரண்டு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, பின்னர் பூரண குணமடைந்து பணிக்குத் திரும்பினர்.
தொடர்ந்து, மேலும் சில காவலர்களுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் அனைத்துக் காவலர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்பரிசோதனையில் இரண்டு பெண் காவலர்களுக்கும், நான்கு ஆண் காவலர்களுக்கும், கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆறு காவலர்களும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆதம்பாக்கம் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்திகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காவல் நிலையம் மூடப்பட்ட நிலையில் அருகே உள்ள மரத்தடியில் தற்காலிகமாக காவல் நிலையம் இயங்கி வருகிறது.