சென்னை:தமிழ்நாட்டில் 2022 - 2023ஆம் கல்வியாண்டின்படி பி.இ., பி.டெக் பொறியியல் படிப்பில், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள் 5, மாநில அரசின் பொறியியல் கல்லூரிகள் 11, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் 3 மற்றும் 408 தனியார்- சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகின்றன.
அதேபோல், 31 பி.ஆர்க் கல்லூரிகள், 29 எம்பிஏ கல்லூரிகள், 2 எம்சிஏ பட்டப்படிப்பு கல்லூரிகளும் அங்கீகாரம் பெற்று இயங்குகின்றன. மொத்தமாக 489 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் இந்த பொறியியல் கல்லூரிகள், ஆண்டுதோறும் தங்களின் இணைப்பு அங்கீகாரத்தைப் புதுப்பிக்க வேண்டும். அதன்படி, 2023-24ஆம் கல்வியாண்டுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பிக்க, கல்லூரிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் விண்ணப்பித்தன. கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை பொறியியல் கல்லூரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
விண்ணப்பத்தின்போது, என்ஐஆர்எப் சான்றிதழ், கடந்த 3 ஆண்டுகளுக்கான வருவாய் மற்றும் செலவின கணக்குச் சான்றிதழ், கடந்த 5 ஆண்டுகளில் கல்லூரியில் பாடப்பிரிவு வாரியாக சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. அதேபோல், கல்லூரியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு விவரங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரையின்படி ஊதியம் வழங்கப்பட்ட விவரம் உள்ளிட்ட விவரங்களும் பெறப்பட்டன.
இந்த நிலையில், 2023- 24ஆம் கல்வியாண்டில் 6 பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அங்கீகாரத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதில் 4 கல்லூரிகள், 2 கல்லூரிகளாக இணைப்பதற்கும் - 4 கல்லூரிகள் நிர்வாகத்தினை மாற்றுவதற்கும் - ஒரு பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரியாக மாற்றவும் விண்ணப்பம் செய்துள்ளன.