சென்னை: புளியந்தோப்பு பட்டாளம் சந்திப்பு அருகே உதவி ஆய்வாளர் செல்லதுரை தலைமையிலான காவல் துறையினர், நேற்று முன்தினம் (ஜூன் 28) காலை வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பல்சர் வண்டியில் வந்த 3 பேரை மடக்கி விசாரணை செய்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேகமடைந்த போலீசார், இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 2 துப்பாக்கிகள் மற்றும் 5 தோட்டாக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பிடிபட்ட நபர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் குஜார் (26), சோனு (22) மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கசிப் (23) என்பது தெரிய வந்துள்ளது.
இதில் முகேஷ் குஜார் மீது ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்களது பின்னணியில் 3 பேர் இருப்பதும், இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு சதி திட்டத்தைத் தீட்டியதும் அம்பலமானது.
அதாவது இவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், எம்கேபி நகரைச் சேர்ந்தவர் மணிப்பால் சிங் (42). இவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம். இவரது 19 வயது மகளை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்தர் என்கிற பவேஷ் என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். இந்த தகவல் வீட்டிற்கு தெரிந்ததும், அந்த பெண்ணை எம்கேபி நகர் பகுதியில் உள்ள அந்த பெண்ணின் சித்தப்பா வீட்டிற்கு மணிப்பால் அனுப்பி வைத்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் ராஜஸ்தானில் இருந்து சென்னை வந்த ராஜேந்தர் தனது காதலியை அழைத்துக் கொண்டு மீண்டும் ராஜஸ்தானுக்கு சென்று விட்டார் எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள், ராஜஸ்தானுக்குச் சென்று இருவரையும் பிரித்து மீண்டும் அந்தப் பெண்ணை எம்கேபி நகர் பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், தனது பெண்ணை அழைத்துச் சென்ற காதலனை கொலை செய்ய வேண்டும் என திட்டம் தீட்டிய பெண்ணின் தந்தை மணிப்பால் சிங், இது குறித்து தனக்கு நன்கு அறிமுகமான சவுகார்பேட்டையைச் சேர்ந்த உபேந்தர் சிங் (41) என்ற நபரிடம் கூறியுள்ளார். ஆகையால், அவர் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் சிங் (33) என்ற நபரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்கள் 3 பேரும் சேர்ந்து இது குறித்து பேசியுள்ளனர். அப்போது, மோகன் சிங் முகேஷ் குஜார் என்பவரை அறிமுகப்படுத்தி உள்ளார்.
இதனையடுத்து, மணிப்பால் சிங் ரூ.1 லட்சம் முதலில் கொடுத்து ராஜேந்தரை கொலை செய்ய துப்பாக்கி வாங்கும்படி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கைதான முகேஷ் குஜார், சோனு மற்றும் கசிப் ஆகிய 3 பேரும் உத்தரப்பிரதேசம் சென்று கள்ளச் சந்தையில் 2 துப்பாக்கி மற்றும் 5 தோட்டக்களை வாங்கி, அதனை எடுத்துக் கொண்டு ராஜஸ்தான் சென்றுள்ளனர். அப்போது மற்றொரு வழக்கில் முகேஷ் குஜார் என்பவரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து சில நாட்கள் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த அவர், சிறையில் இருந்த தகவலை சென்னையில் உள்ள மணிப்பால் சிங்கிடம் கூறி, உங்கள் வேலையை முடித்து விட்டோம். பேசியபடி பணம் வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனையடுத்து ராஜஸ்தானிலிருந்து முகேஷ் குஜார், சோனு, கசிப் ஆகிய 3 பேரும் சென்னை வந்து மணிப்பால் சிங்கிடம் இருந்து மேலும் 4 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளனர்.
அதன் பின், மணிப்பால் சிங் ராஜஸ்தானில் விசாரித்தபோது இவர்கள் ராஜேந்தரை எதுவும் செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இது குறித்து மணிப்பால் சிங் முகேஷ் குஜாரிடம் கேட்டுள்ளார். இது பற்றி பேசினால் உன்னையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மீண்டும் ராஜஸ்தான் செல்ல முகேஷ் குஜார் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் தயாராகும்போது வாகன சோதனையில் போலீசாரிடம் பிடிபட்டதும் தெரிய வந்துள்ளது.
வியாசர்பாடி எம்கேபி நகர் பகுதியைச் சேர்ந்த மணிபால் சிங் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த உபேந்தர் சிங்மோகன் சிங் ஆகிய 3 பேரையும் நேற்று புளியந்தோப்பு போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட முகேஷ் குஜார் உள்ளிட்ட 3 பேர் மற்றும் தற்போது கைது செய்யப்பட்ட 3 பேர் என 6 பேர் மீதும் ஆயுதத்தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: Etv Bharat Exclusive: வனம் தின்னும் பிளாஸ்டிக்.. குப்பை மேட்டில் மேயும் வனஉயிர்கள் - என்ன நடக்கிறது கோவையில்?