ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை சென்னை:பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் வெளியூர் செல்வதற்கு ஏதுவாக, கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்க முதலமைச்சர் உத்தரவிட்டதன்படி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்துகளும், அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக இயக்கப்படுவதை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று (ஜன.12) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது, “சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில், கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பயன்பாட்டிற்கு வந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையிலும், ஆறு இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு, அனைத்து பகுதியில் இருந்தும் பேருந்துகள் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையில், ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். இந்த ஆண்டு, ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மக்கள் கூடுதலாக இந்த ஆண்டு பயணம் செய்ய உள்ளனர் என்பதால், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த பேருந்துகள் எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பது குறித்து, மக்களுக்கு ஊடகம் மூலமாக தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்படும். மேலும், முன்பதிவு செய்தவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலைய நுழைவு வாயிலுக்கு மினி பேருந்துகள் இலவசமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்து முதலாவதாக பொங்கல் பண்டிகைக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் சிறு பிரச்னைகள், குழப்பங்கள் இருக்கும். அவை விரைவில் தீர்க்கப்படும். ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க:பாலமுருகனடிமை சுவாமிக்கு 2024 திருவள்ளுவர் விருது - தமிழக அரசு அறிவிப்பு..!