தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’1.5 கோடி முதலீடு செய்தேன்... ரூ.25 லட்சம் கிடைக்குமானு கூட தெரியல’ - விடுதி உரிமையாளர் புலம்பல் - hostels in curfew

கரோனா நெருக்கடியில் கட்டட உரிமையாளர்களுக்கு 50% வாடகையை தருவதற்கு கூட கடன்தான் வாங்க வேண்டும் என இயலாமையுடன் கள நிலவரத்தைத் தெரிவிக்கின்றனர், விடுதி உரிமையாளர்கள்.

விடுதி
விடுதி

By

Published : Jul 30, 2020, 4:35 PM IST

Updated : Jul 30, 2020, 6:52 PM IST

நவீன யுகத்தில் வேலை வாய்ப்பை வாரி வழங்குவது சென்னை போன்ற நகரங்கள்தான். இதனால் கிராமத்திலிருந்து பெரும்பாலானோர் இங்கு இடம் பெயருகின்றனர். இப்படி எவ்வித முகாந்திரமும் இல்லாமல் பிற இடங்களுக்கு பயணிக்கும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது, அந்தந்த ஊர்களில் இருக்கும் விடுதிகள்தான்.

சென்னை போன்ற நகரங்களில் எங்கு திரும்பினாலும் பெண்களுக்கான விடுதிகள் புற்றீசல்கள் போல காணப்படுகின்றன. ஆனால் கரோனா நெருக்கடி பாரபட்சமின்றி அனைத்தையும் வெறுமையாக்கியது.

ஒருபுறம் விடுதி உரிமையாளர்கள் தங்களது பொருளாதார இழப்பைச் சமாளிக்க விடுதியில் தங்கியிருந்தவர்களிடம் வாடகைக் கேட்க, வீட்டிற்கு திரும்பிய அவர்களுக்கு அது கடும் நெருக்கடியானது.

இது குறித்து விடுதி உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர் மனோகரன் கூறுகையில், “சென்னையில் சுமாராக ஐந்தாயிரம் விடுதிகள் இயங்கி வந்த நிலையில் தற்போது நூறுக்கும் குறைவாகவே இயங்குகின்றன. தற்போது பெரும்பாலோர் சொந்த ஊருக்கு திரும்பியதால் 90 விழுக்காடு விடுதிகள் மூடப்பட்டன. இந்த விடுதிகளை நம்பி இருந்த சமையல் செய்பவர்கள், பால் விற்பனையாளர்கள் என பலருக்கும் வேலையில்லாமல் போனது. விடுதிகள் மூடப்பட்ட நிலையில் கட்டட உரிமையாளர்களுக்கு வாடகை கொடுக்கமுடியாது என்ற நிலைமைக்கு விடுதி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்த நேரத்தில் நாங்கள் எப்படி வாடகை தருவது என தெரியவில்லை. கட்டட உரிமையாளர்களின் நிலைமை எங்களுக்கு புரிகிறது. கடன் வாங்கி 50% வாடகையை தருவதற்கு கூட எங்களுக்கு கால அவகாசம் தரவேண்டும். இதையும் மீறி எங்கள் முன்பணத்தில் வாடகையை எடுத்துக்கொண்டால் நாங்கள் நீதிமன்றத்துக்கு போகுவதற்கு தவிர வேறு வழி இல்லை” என்றார்.

விடுதி உரிமையாளர்கள் இந்த தொழிலை நம்பி கடன் வாங்கி பல கோடி முதலீடு செய்துள்ளனர். தற்போது விடுதிகள் மூடப்படுவதால் உரிமையாளர்களுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவிக்கிறார் தனியார் பெண்கள் விடுதி உரிமையாளர் செல்வம்.

அவர் கூறுகையில், “இந்த விடுதிகளை நம்பி 1.5 கோடி முதலீடு செய்தேன். தற்போது காலி செய்தால் எனக்கு 25 லட்சம் கிடைத்தாலே அது பெரிய விஷயம்தான். அசோக் நகரில் 3 விடுதிகளும், வேளச்சேரியில் ஒரு விடுதியும் என நான்கு விடுதிகளை நடத்தி வருகிறேன். இதில், கரோனா ஊரடங்கில் வீடுகளுக்கு செல்லாதவர்களை ஒரே விடுதியில் தங்க வைத்து இருக்கிறேன்” என்றார்.

இயல்பு நிலைக்கு திருப்பினால் கூட மீண்டும் விடுதியில் தங்குவதற்கு பெண்கள் வருவார்களா? என தெரியாது. அதனால் 3 விடுதிகளை காலி செய்து ஒரு விடுதி மட்டும் நடத்தவிருப்பதாகத் தெரிவிக்கிறார் செல்வம்.

’1.5 கோடி முதலீடு செய்தேன்... ரூ.25 லட்சம் கிடைக்குமானு கூட தெரியல’ - விடுதி உரிமையாளர் புலம்பல்

இது தொடர்பாக விடுதியில் தங்கி வேலை செய்த சுரேஷிடம் கேட்டோம். அவர் கூறுகையில், “எனது நிறுவனத்தில் வீட்டுலயே இருந்து பணி புரிய அனுமதி வழங்கிவிட்டனர். மேலும் நிறுவனத்தில் 25% சம்பளம் பிடிப்பு செய்கின்றனர். நான் விடுதியின் வாடகையை செலுத்த வேண்டும், இந்த நெருக்கடிக்கு மத்தியில் வீட்டுச் செலவுக்கும் கொடுக்க வேண்டும். ஒரு வேளை எனக்கு இ -பாஸ் கிடைத்தால் விடுதியை காலி செய்து வீடுக்கு திரும்பிவிடுவேன். நானே தங்காதபோது வாடகையும் தர தேவையில்லை” என்றார்.

ஆள் அரவமின்றி காற்று வாங்கிக் கொண்டிருக்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு காலத்திற்கு ஏற்றார்போல சில சலுகைகளை அளித்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் விடுதிகளை நடத்தமுடியும். அதே சமயத்தில் கட்டட உரிமையாளர்களும் விடுதி உரிமையாளர்களின் சிக்கலைப் புரிந்து கொண்டு வாடகை வாங்குவதில் சில காலதாமதங்களை அனுசரித்துக் கொள்ள வேண்டும் என்பதே விடுதி உரிமையாளர்களின் ஒருமித்தக் குரலாக உள்ளது.

இதையும் படிங்க: கரோனா நெருக்கடியில் தலைவிரித்தாடும் வாடகை பிரச்னை: அரங்கேறும் வன்முறைகளுக்கு தீர்வுதான் என்ன?

Last Updated : Jul 30, 2020, 6:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details