சென்னை: பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில், சென்னை மாநகர காவல்துறை ‘சிற்பி’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கு தாம்பரத்திலுள்ள தனியார் கல்லூரியில், ‘சிற்பி’ திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான தேசப்பற்றை ஊக்குவிக்கும் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தேசப்பற்று மற்றும் போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை அலுவலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் ராணுவ விஞ்ஞானி முனைவர் டில்லிபாபு ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழ்நாடு முதலமைச்சர் ‘சிற்பி’ என்ற திட்டத்தை கடந்த 14ஆம் தேதி 4.25 கோடி ரூபாய் செலவில் சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்சியாக இந்த திட்டம் இன்று நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக சிற்பி திட்டத்தில் 100 அரசு பள்ளியிலிருந்து, ஒவ்வொரு பள்ளியிலும் தலா 50 மாணவர்கள் என சுமார் 5,000 மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் பயிற்சி மையங்கள் நடத்தப்படுகின்றன. அதில் எவ்வாறு ஒழுக்கமாக வாழ வேண்டும், எவ்வாறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும், யோகா செய்வது குறித்து பலவித கருத்துக்களை அவர்களுக்கு சொல்லித் தருவதோடு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.
இதை நல்ல விதமாக வடிவமைத்துள்ள சென்னை காவல் துறை உயர் அலுவலர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தில் மாணவர்களின் ஆர்வத்தைப் பொறுத்து, வரும் காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கும் பயிற்சிகள் கொடுக்கப்படும். இங்கு பயிற்சி எடுக்கும் மாணவர்கள் எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டும், எவ்வாறு தேசப்பற்றை உருவாக்க வேண்டும், போதைப் பொருட்களை எப்படி ஒழிக்க வேண்டும் போன்ற கருத்துக்களை உள்வாங்கி, அவர்கள் பயிலும் பள்ளிகளில் உள்ள மாணவர்களிடையே உரையாடல் செய்து எடுத்துச் சொல்லும் நல்ல விஷயமாக அமைந்துள்ளது.
மாணவர்களை சுற்றாலாத் தளங்களுக்கு அழைத்துச் சென்று ,அங்கு இருக்கும் வரலாற்றுகள் குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்படும். நல்ல சமூகத்தை முன்னெடுத்து செல்லக்கூடிய ஒரு திட்டமாக இது உள்ளது. வரும் காலங்களில் சிற்பி திட்டத்தினை சென்னை மட்டுமில்லாமல், மற்ற மாவட்ட அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்" என தெரிவித்தார்.