சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் சனிக்கிழமை (ஆக.28) வேளாண், கால்நடை மற்றும் மீன்வளம் பால்வளத்துறைகளின் மானியக்கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்றது.
மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசிய முதலமைச்சர், "இலங்கை அகதிகள் முகாம் என்பது இனி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து சட்டப்பேரவை கூட்ட மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் குழுத் தலைவர் சிந்தனைச்செல்வன், "டெல்லியில் அறவழியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஒன்றிய அரசு கொச்சைப் படுத்திவருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர், 3 வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். இந்தத் தீர்மானத்தை நாமும் இணைந்து வரவேற்று இருக்கிறோம். இதைக் கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் அகதிகள் என்று அழைக்கப்பட்டு வந்தனர். இது குறித்து யாரும் கோரிக்கை வைக்காமலே அகதிகள் முகாம்கள் இனி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
இது வெறும் சொல்லில் ஏற்பட்ட மாற்றம் அல்ல. தாயுள்ளத்தோடுவந்துள்ள கருத்து. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது " என்றார்.
இதையும் படிங்க:இலங்கை அகதிகள் முகாம் இனி ‘மறுவாழ்வு முகாம்’ - முதலமைச்சர் ஸ்டாலின்