சென்னை: சென்னையில் வாகனப் பெருக்கமும், மக்கள் பெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வேலை தேடி சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. நீண்ட காலமாக சென்னையின் முக்கிய பிரச்சினையாக இருப்பது போக்குவரத்து நெரிசல். இந்த போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்து பகுதிகளிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக இன்னும் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், தற்போது வரை மாநகரப் பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் போக்குவரத்து துறையில் தொழிநுட்ப ரீதியாகவும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணிக்க ஒரே இ-டிக்கெட் முறையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இ-டிக்கெட் மூலம் எந்த நேரமும் எங்கு வேண்டுமானும் பயணம் செய்யலாம். இதனால் பேருந்து, ரயில் என தனித்தனியாக டிக்கெட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒரே பயணச்சீட்டு முறைக்கென தனியாக செயலி ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இதில் புறப்படும் இடம், சேரும் இடத்தை பதிவு செய்த பின்னர் பயணிக்க உள்ள போக்குவரத்து முறைகளை பதிவு செய்ய வேண்டும். இத்திட்டத்தை மெட்ரோ நிர்வாகத்துடன் இணைந்து அரசு செயல்படுத்தவுள்ளது. 2024ஆம் ஆண்டு தொடங்கத்தில் இருந்து இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டரை தனியார் நிறுவனத்திற்கு வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மின்கம்பங்களை அகற்றாமல் சாலை விரிவாக்கம்.. அதிகாரிகள் அலட்சியத்தால் விபத்து ஏற்படும் அபாயம்!