சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் 16ஆவது பேரவையின் முதல் கூட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று (ஜூன்.21) தொடங்கி வைத்து உரையாற்றினார். அதில் ’சிங்காரச் சென்னை 2.0’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என ஆளுநர் அறிவித்துள்ளார்.
கடந்த 1996ஆம் ஆண்டு 2002ஆம் ஆண்டு வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராகப் பொறுப்பு வகித்தார். அப்போது சென்னை மாநகராட்சியை பொலிவுபடுத்தும் வகையில், சிங்காரச் சென்னை திட்டம் கொண்டு வரப்பட்டது. ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சிங்காரச் சென்னை திட்டத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திமுக ஆட்சியில் இருந்த 2006ஆம் ஆண்டு தொடங்கி 2011ஆம் ஆண்டு வரையில் இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததை அடுத்து சிங்காரச் சென்னை திட்டம் கிடப்பில் போடப்பட்டது.