சென்னை:தமிழகத்தில் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் நோக்கத்திலும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிங்கபூர் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து ஜப்பான் செல்லவுள்ளார். சுற்றுப்பயணத்தின் முதல் நாளான இன்று, அங்குள்ள Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறிய அவர், தமிழ்நாட்டில் வரும் 2024 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து, சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனை நேரில் சந்தித்த முதலமைச்சர், இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் கலந்துறையாடினர்.
அதனை தொடர்ந்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் ஈஸ்வரனுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர், தமிழ்நாடு மேற்கொள்ளவுள்ள பல்வேறு புதிய திட்டங்களுக்கு முதலீடு ரிதியாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, இச்சந்திப்பின்போது, அமைச்சர் ஈஸ்வரன் முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் வழக்கமான முதலீடுகள் தவிர பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது எனவும், செமிகண்டக்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் தயாரிப்பிற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் எடுத்துறைத்தார்.