சென்னை: தமிழ்நாடு முழுவதும் போலி ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு விற்பனை செய்த ஐந்து கடை உரிமையாளர்களை மாநில சைபர் கிரைம் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக 8 மாவட்டங்களில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் பொதுமக்கள் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு, வங்கி தொடர்பாக வங்கி அதிகாரிகள் பேசுவதாகவும், கிரெடிட் கார்டு,டெபிட் கார்டை மாற்ற வேண்டும், வங்கி கணக்கில் பிரச்சனை உள்ளது, சிம்கார்டு டீஆக்டிவேட் செய்யப்படும் என பல்வேறு காரணங்களை கூறி நாள்தோறும் போன் செய்து பல்வேறு மோசடிகளில் மோசடி கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன். மேலும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதும், வெளிநாட்டினர் இந்தியாவில் சிம்கார்டுகள் சட்ட விரோதமாக வாங்குவதும் சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. டெலிகிராம் ஆப்பில், பார்ட் டைம் வேலை என்ற விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொண்ட நபரிடம், 45 லட்சம் மோசடி செய்த சம்பவமும் அரங்கேறி உள்ளது.
இதனை தடுக்கும் வகையில், முதற்கட்டமாக செல்போன் சிக்னல் வைத்து குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்த போது அனைத்து சிம்கார்டுகளும் போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்டதும் வெவ்வேறு மாநிலங்களில் வாங்கி பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குற்றவாளிகள் பயன்படுத்தி வந்ததையும் மத்திய தொலைதொடர்பு துறை கண்டுபிடித்தது.
இதனை அடுத்து (Facial Recognition) முக அமைப்பு கண்டறியும் மென்பொருள் தொழில்நுட்பம் மூலம், மத்திய தொலைதொடர்பு துறையில் உள்ள தரவுகளை ஆய்வு செய்ததில், தமிழகத்தில் மொத்தம் 55 ஆயிரத்து 982 சிம்கார்டுகள் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வாங்கப்பட்டதை கண்டுபிடித்து அதனை மத்திய தொலைதொடர்பு துறை அதிகாரிகள் முடக்கி இருந்தனர்.
இதனை அடுத்து முடக்கப்பட்ட சிம்கார்டுகள் எங்கே வாங்கப்பட்டன என்பது குறித்த தகவல்களை ஆய்வு செய்து, அதன் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாநில சைபர் க்ரைம் போலீசாருக்கு தொலைத்தொடர்பு துறை பரிந்துரை செய்து இருந்தது. அதன் அடிப்படையில் விழுப்புரம்,கோயம்புத்தூர், கடலூர், திருச்சி,சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள சிம்கார்டு விற்பனை செய்யும் கடைகள் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 5 குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கைதானவர்கள் போலி ஆவணங்களை பெற்று அதிக விலைக்கு சிம் கார்டுகளை விற்பனை செய்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. ஏற்கனவே சிம் விற்பனை நடைபெறும் இடங்களான சில்லரை கடைகள், தனியார் சிம் நிறுவனத்திற்கு சொந்தமான விற்பனை மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல்வேறு வழிமுறைகள் அறிவுரைகள் காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருப்பதாகவும், ஆனால் அதையும் மீறி இதுபோன்று குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் திடீர் சோதனை நடத்தி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் எச்சரித்து உள்ளனர்.
இதையும் படிங்க: Part time job Cheating: பார்ட் டைம் வேலை என டெலிகிராமில் மோசடி.. ரூ.45 லட்சம் பறிகொடுத்த அவலம்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?