தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சில்வர்புரத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 42). இவர் அப்பகுதியில் உள்ள பர்னிச்சர் கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சில்வர்புரத்தில் உள்ள காப்பகம் அருகே இன்று (செப்.22) காலை நந்தகுமார் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் இது குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், நந்தகுமாரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், நந்தகுமாருடன் பணிபுரிந்து வந்து வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஜார்ஜ் (வயது 45) அவரது நண்பருடன் இணைந்து இக்கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
சில்வர்புரத்தைச் சேர்ந்த ஜார்ஜ், நந்தகுமார் வேலை செய்த அதே பர்னிச்சர் கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், ஜார்ஜை கடந்த சில மாதங்களுக்கு முன் பணியில் இருந்து திடீரென நிர்வாகத்தினர் நீக்கியுள்ளனர். தொடர்ந்து, தான் வேலை இழந்ததற்கு நந்தகுமார் தான் காரணம் என ஜார்ஜ் விரோதம் கொண்டுள்ளார். எனவே அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஜார்ஜ், தனது உறவினரான விளாத்திக்குளம் வேடநத்தத்தைச் சேர்ந்த இளையராஜாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி, நந்தகுமாரை கொலை செய்வதற்காக வாளினை தயார்செய்து தருமாறு இளையராஜாவிடம், ஜார்ஜ் கேட்டுள்ளார். இதற்காக 15 ஆயிரம் ரூபாயை அவர் வழங்கியதாகத் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் இன்று அதிகாலை நந்தகுமார் பணிமுடிந்து திரும்புகையில் ஜார்ஜ் அவரைக் குத்தி, கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரிய வந்தது.