தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகனும் டி. ராஜேந்திரன் மகனுமான சிலம்பரசன் இன்று (பிப்ரவரி 3) தனது 35ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பல தோல்வி படங்களுக்கு அடுத்து மெகா வெற்றியைக் கொடுத்த மாநாடு படத்திற்குப் பிறகு அவர் கொண்டாடும் பிறந்த நாள் இதுவாகும்.
பத்தாண்டுகளுக்குப் பிறகு ‘பத்து தல’ கம்பேக்
காதல் அழிவதில்லை படத்தில் கதாநாயகனாகத் தொடங்கிய சிம்புவின் திரைப்பயணம் அசாத்தியமானது. தந்தையின் படங்களில் நடித்து சிறு வயதிலேயே ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ பட்டத்தைப் பெற்றவர்தான் சிம்பு. தம், அலை எனக் கல்லூரி நாயகனாக வந்து பெண்களின் கனவு நாயகனாக மாறினார். கோவில் சிம்புவின் யதார்த்தமான நடிப்புக்கு ஒரு சான்றாகும்.
வல்லவன், மன்மதன் என உருகிய காதல் கதாபாத்திரங்களினாலும் சிலம்பாட்டம் போன்ற மாஸ் ஸ்டோரிகளிலும் கச்சிதமாக நடித்தார்.
விண்ணைத் தாண்டி வருவாயா கார்த்திக்காக வந்து ஓ சோனா என்று உருகி ரசிகர்களையும் உருகவைத்து பாலச்சந்தரிடமே பாராட்டு வாங்கினார். இடையில் அச்சம் என்பது மடமையடா, இது நம்ம ஆளு என என்ட்ரீ கொடுத்தாலும் சிறந்த படம் என்று சொல்லும் வகையில் வெற்றி அடையவில்லை.
சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகி சிம்புவின் ரீ-என்ட்ரீயான மாநாடு சிறந்த கம்பேக்காகும். அதிக உடல் எடையிலிருந்து குறைந்து முற்றிலும் புதிய மாஸான கிளாஸான லுக்கில் நடித்திருந்தார். வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி அடைந்தது.