சென்னை கிண்டியிலுள்ள தனியார் விடுதியில் நாளை நடைபெறவுள்ள நிகழ்வில், ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட மூன்று அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார். மேலும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பெயரை வெளியிடுவதோடு, தொழில் நிறுவனங்களுக்கான குறைதீர்க்க உதவும் தொழில் நண்பன் என்ற இணையதளத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
இதுதவிர 60 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று உயர்நிலை திறன் மேம்பாட்டு மையங்களை தொடங்கி வைத்தல், 28.43 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு புதிய தொழில் பயிற்சி நிலையங்களை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம், திறன் மேம்பாட்டு ஆய்வறிக்கை மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு திட்டங்களை வெளியிடுதல், டி.ஆர்.ஓ மற்றும் ஐஐடி சென்னை நிறுவனங்களுடன் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருவழித் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவைகளும் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகவுள்ளன.