திருச்சியை சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,”கரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு எவ்வித மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் சித்த மருந்து மூலம் கரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க மிக குறைந்த அளவிலான பணமே செலவாகும்.
ஆனால் சித்த மருத்துவத்திற்காக அரசு குறைந்த அளவில் மட்டுமே நிதி ஒதுக்குகிறது. திருச்சி மாவட்டத்தில் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.அவர்களுக்கு சித்த மருந்து மூலம் சிகிச்சை அளிக்க திருச்சியில் சித்த மருத்துவ மையம் இல்லை.
கரோனா தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவமனையை நாடினால், மருத்துவமனையில் காலி இடங்கள் இல்லை என கூறி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைகாக சுமார் 5 லட்சம் வரை செலவாகிறது. ஆனால் சித்த மருத்துவ முறையை நாடினால் மிக குறைவான பணமே செலவாகும். எனவே சித்த மருத்துவ மையம் தமிழ் நாட்டில் அதிக இடங்களில் அமைக்க உரிய நிதி ஒதுக்கி, சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்.