கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஐந்தாயிரத்து 400க்கும் மேற்பட்டவர்களை சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்து குணமாக்கியவர் சித்த மருத்துவர் வீரபாபு. இவர் முன்னதாகவே உழைப்பாளி உணவகம் என்ற பெயரில் ஏழை மக்களுக்கு பத்து ரூபாயில் உணவு வழங்கி வருகிறார். இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உழைப்பாளிகளின் நலனை கருத்தில் கொண்டு சித்தா மற்றும் அலோபதி ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை மையத்தை தொடங்கியுள்ளார்.
இந்த மருத்துவமனையில் காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. உழைப்பாளி மருத்துவமனையை திறந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்த மருத்துவர் வீரபாபு, "உழைப்பாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட உழைப்பாளி உணவகம் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. அதேபோல் தற்போது தொடங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மருத்துவ ஆலோசனை மையத்தில் 10 ரூபாய் கட்டணத்தில் உழைப்பாளிகளுக்கு நோய் சிகிச்சைக்கான ஆலோசனை வழங்கப்படவுள்ளது.
ஆங்கில மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் என இரண்டு மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் வழங்கப்படும். நோயாளிகள் நீண்ட நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெறுவதை தவிர்க்கும் வகையில் சிகிச்சைகள் வழங்கப்படும்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியில் கடந்த ஐந்து மாதங்களில் சேர்க்கப்பட்ட ஐந்தாயிரத்து 400 கரோனா நோயாளிகளில், ஐந்தாயிரத்து 300 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 100 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளித்துவருகிறோம்.
மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர் வீரபாபு உழைப்பாளி மருத்துவமனையிலும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசிடம் அனுமதி பெறுவோம். கரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அதற்கான கட்டணத்தை அரசு அளிக்கவில்லை. இனிமேலாவது கட்டணம் செலுத்தப்படும் என நம்புகிறோம். அரசு அளித்த ஒத்துழைப்பின் மூலமே கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிந்தது. எனவே, அரசு கட்டணத்தை அளிக்காவிட்டாலும் பரவாயில்லை" எனத் தெரிவித்தார்.