கரோனா தொற்று பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், செவிலியர் முதல் வரிசை வீரர்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். கரோனா தடுப்பு மருந்துகள் குறித்த ஆராய்ச்சியில் பல்வேறு அறிவியலாளர்கள் உலகம் முழுவதும் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை கரோனாவிற்கு தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டறியப்படாத நிலையில், தான் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய நோயாளிகளில் இரண்டு பேரை தான் குணப்படுத்தியதாகவும் கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையை நடத்தி வந்த சித்த மருத்துவர் தணிகாசலம் தெரிவித்திருந்தார்.
சமூக ஊடகங்களில் பிரபலமான இவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், உலக சுகாதார நிறுவனம் குறித்தும் தவறான தகவல்களை தன் சமூக வலைதள பக்கங்களில் பரப்பியதாகக் கூறி, இவருக்கு எதிராக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் முன்னதாக புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் காவல் துறையினர், மே ஆறாம் தேதி தகவல் தொழில்நுட்ப சட்டம், அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டது, நோய்த் தொற்று தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் இவரைக் கைது செய்து, எழும்பூர் சிறையில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து மே 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு பூந்தமல்லி கிளைச் சிறையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார்.