திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த காமக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை, இவரது தம்பி தியாகராஜன். இவர்களது குடும்பத்துக்கு சொந்தமான 16 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தின் உரிமை தியாகராஜனின் மகள் சாமுண்டீஸ்வரி பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் முறையாக பாகப்பிரிவினை செய்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் சுமார் ஒன்றே முக்கால் ஏக்கர் நிலம் தொடர்பான பிரச்னை சாமுண்டீஸ்வரிக்கும், அண்ணாமலை மகள் சாவித்திரிக்கும் இடையே இருந்து வந்ததுள்ளது.
இது தொடர்பாக ஆரணி சார்பு நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் வழக்கு நடந்து வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால் தனது பாத்தியத்தில் உள்ள நிலத்துடன், பிரச்னைக்குரிய நிலத்திலும் சாவித்திரி விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சொத்தின் உரிமை தன்னிடம் இருப்பதாகக் கூறி சாமுண்டீஸ்வரி ஆரணி களம்பூர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால், சாவித்திரியின் உறவினர்கள் காவல்துறையில் பணி செய்து வருவதால் அவர்களின் உதவியுடன் சாமுண்டீஸ்வரின் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளது.
இதனால் சாமுண்டீஸ்வரி வேலூர் சரக காவல் ஆணையர் வனிதாவிடம் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மேல்முறையீட்டு புகார் அளித்துள்ளார். அதன்படி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி களம்பூர் காவல் துறையினருக்கு வனிதா உத்தரவிட்டார்.
அதன்பேரில் களம்பூர் காவல் துறையினர் காமக்கூர் சென்று சாவித்திரி, சாமுண்டீஸ்வரி தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை பிரச்னைக்குரிய நிலத்தில் இருவருமே வரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் நிலத்தை சமன்படுத்தவும் முயன்றுள்ளனர். அப்போது சாவித்திரி தரப்பும், காமக்கூர் கிராம மக்களும் சேர்ந்து பயிரிட்டு அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை நாசம் செய்யக்கூடாது என்று கூறி தடுத்துள்ளனர்.
இதுபற்றி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெரீனாபேகத்துக்கு களம்பூர் காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு சென்ற ஜெரீனாபேகம் பிரச்னைக்குரிய நிலத்தில் பயிரிட்டிருந்த நெற்பயிரை டிராக்டர் வைத்து சமன் செய்ய உத்தரவிட்டு, தனது காரை சாலையில் நிறுத்தி பாதுகாப்பாக நின்று கொண்டிருந்துள்ளார்.