சென்னை:காவலர் குடியிருப்பு ஒன்றில் ஒதுக்கப்பட்ட வீட்டைக்காலி செய்யும்படி 2014ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து காவல் துறையைச் சேர்ந்த மாணிக்கவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் இன்று (ஜூன் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது, 2014ஆம் ஆண்டிலேயே இடத்தை காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டு, அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்த பிறகு இந்த ஆண்டு தான் இடத்தை காலி செய்திருப்பதாகவும், அதன் காரணமாக அவர் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கப்படவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
'ஆர்டர்லி' என்ற பெயரில் அதிகார துஷ்பிரயோகம்:தொடர்ந்து நீதிபதி கூறுகையில், உயர் அலுவலர்கள் தங்களுக்கு கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால் காவல் துறை நன்மதிப்பை இழக்க நேரிடும் என்றார். மக்கள் மத்தியில் காவல் துறை மீது ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், உயர் அலுவலர்கள் தங்கள் வீடுகளில் 'ஆர்டர்லி' என்ற பெயரில் காவல் துறையினரை துஷ்பிரயோகம் செய்வது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், ஆனால் அரசால் அவை கவனிக்கப்படாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.