சென்னை: தமிழ் சினிமாவில் ஏற்கனவே கதைக்கு பஞ்சம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது தலைப்புக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் படம் எடுக்கப்பட்ட பிறகு அதற்கு தலைப்பு வைக்கப்படும். இப்போது தலைப்பை வைத்து விட்டு அதற்கு தகுந்தாற்போல் கதை எழுதப்படுகிறது. பழைய படங்களில் தலைப்பே ஒரு படத்தின் கதையை சொல்லிவிடும். இப்போது கதைக்கும் தலைப்புக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் வைகைப்புயல் வடிவேலுவின் கதாபாத்திரம், வசனம் ஆகியவை படத்தின் தலைப்பாக வைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு 'கான்ட்ராக்டர் நேசமணி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நாய் சேகர் தலைப்பை நடிகர் சதீஷ் கைப்பற்றிய நிலையில் இதுவும் தலைப்பாகியுள்ளது. வடிவேலுவின் 'அவனா நீய்யி' 'நான் அப்படியே ஷாக்காய்ட்டேன்' 'கடுப்பேத்துறார் மை லார்ட்' போன்ற வசனங்கள் படங்களின் தலைப்பாகும் எனத் தெரிகிறது. வடிவேலுவின் வசனங்களைத் தொடர்ந்து கதாபாத்திரப் பெயர்களையும் படத்தலைப்பாக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தலைப்புக்கு முக்கிய பங்கு
பல லட்சம் முதல் கோடி ரூபாய் வரை செலவு செய்து எடுக்கப்படும் படங்களின் வெற்றியில் தலைப்புக்கு முக்கிய பங்கு இருக்கிறது. படத்தின் தலைப்பை பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதென்பது ஒரு படத்தின் தொடக்கநிலை வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் ஒரு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட குறைந்தபட்சம் 15 லட்சம் ரூபாய் செலவாவதாக தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தேர்வு செய்யப்படும் தலைப்பு ஏற்கனவே ரசிகர்களிடம் பிரபலமான வார்த்தையாக இருந்தால், கூடுதல் லாபம். இதனால் நடிகர் வடிவேலு பேசிய வசனங்களை படத்தின் தலைப்புகளாக வைத்து வருகின்றனர்.
நானும் ரௌடிதான்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ' நானும் ரௌடிதான் ' போன்ற படங்களின் வெற்றிக்கு நடிகர் வடிவேலும் காரணம்.
'திரிஷா இல்லனா நயன்தாரா' 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' 'ஜில் ஜங் ஜக்' போன்ற படங்கள் வடிவேலுவின் பிரபலமான வசனங்களிலிருந்து எடுக்கப்பட்டது.