தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஒரே நாளில் 15 செல்போன் பறிப்பு - கைதான இளைஞர்களின் திடுக்கிடும் வாக்குமூலம் - செல்போன் திருட்டு

சென்னையில் பல இடங்களில் ஒரே நாளில் தொடர்ச்சியாக 15 செல்போன்களை பறித்த சம்பவத்தில் கைதான இளைஞர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 23, 2023, 10:51 PM IST

சென்னை: கே.கே நகர், வடபழனி, அசோக் நகர், மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 12, 13ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக மொத்தம் 17 பேரிடம் செல்போன் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தியாகராய நகர் துணை ஆணையர் தனிப்படை காவலர்கள் விசாரணையில் களமிறங்கினர். சுமார் 5 நாட்களில் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, இந்த வழக்குகளில் வியாசர்பாடி, எம்கேபி நகர் பகுதிகளைச் சேர்ந்த அஜய், சபியுல்லா விக்கி, கிருபா, நாகூர் மீரான் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 17 செல்போன்கள் மீட்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியை காவல் துறையினர் அடையாளம் கண்டனர். குறிப்பாக சைனா பஜாரில் நாகூர் மீரான் செல்போன் கடை நடத்தி வருவதும், வழிப்பறி செய்யப்பட்ட செல்போன்கள் அனைத்தையும் ஐஎம்இஐ நம்பரை மாற்றி புது செல்போனாக இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு குருவி மூலம் விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதனால், சைபர் கிரைம் காவல் துறையினர் கண்டுபிடிக்க முடியாத அளவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழிப்பறி செய்யப்பட்ட செல்போனை புதிய செல்போனாக மாற்றி வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. நாகூர் மீரான் செல்போன் விற்பனை செய்த பணத்தை அனுப்பும் வங்கிக் கணக்கை ஆய்வு மேற்கொண்ட போது, சையது யாமின் பாஷா என்பவரது வங்கிக் கணக்கிற்கு அதிகப்படியான பணம் சென்றது தெரியவந்துள்ளது.

கைதான இளைஞர்கள்

தொடர் விசாரணையில் சையது யாமின் பாஷா மீது நாட்டு வெடிகுண்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. ‘மெட்ரோ’ மற்றும் ‘திமிரு பிடிச்சவன்’ படத்தில் வரும் வில்லன்களை போல் செல்போன் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களை நிகழ்த்தி சிக்காமல் எப்படி செல்வது என்பது குறித்து ரூட்டு போட்டுக் கொடுத்து பயிற்சி அளிக்கும் கில்லாடி சையது யாமின் பாஷா என்பது தெரியவந்தது.

இவ்வாறு கிடைக்கும் பணத்தை செல்போன் பறிப்பில் மற்றும் செயின் பறிப்பில் ஈடுபடும் இளைஞர்களுக்கு கஞ்சா போதை, விலை உயர்ந்த ஆடைகள், உல்லாச வாழ்க்கை என பணத்தை அள்ளிக் கொடுத்து இது போன்று தொடர் வழிப்பறியில் ஈடுபடுத்த முளைச்சலவை செய்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சிக்காமல் சையது யாமின் பாஷா தலைமறைவாக இருந்து வருவதாகவும், தலைமறைவாக இருந்து கொண்டே தன் கட்டுப்பாட்டில் உள்ள இளைஞர்களை பயன்படுத்தி தொடர்ந்து பல்வேறு வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

செல்போன் சிக்னல் மூலம் சையது யாமின் பாஷாவை பிடிக்காமல் இருப்பதற்கு வாட்ஸ் அப் கால் மூலம், தனியாக செய்திகளை பயன்படுத்தி விபிஎன் தொழில்நுட்பம் மூலமாக கால் செய்யப்படும் எண்கள் மூலம் தெரியாமல் பேசி இந்த வழிப்பறி சம்பவங்களை நிகழ்த்துவார் என கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், செல்போனில் பேசினால் சிக்க வாய்ப்பு இருக்கிற காரணத்தினால் தனியாக இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி, அதன் மூலமாக வழிப்பறியில் ஈடுபடும் இளைஞர்களுடன் சேட் செய்தும், இன்ஸ்டாகிராம் மூலமாக கால் செய்தும் எந்த இடத்தில் எவ்வாறு செயின் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்களை நிகழ்த்த வேண்டும் என்பதை ரூட்டு போட்டு சையது யாமீன் பாட்ஷா தருவதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனால், காவல் துறையினரின் கையில் சிக்காமல் பல ஆண்டு காலமாக தப்பித்து வந்த சையது யாமீன் பாட்ஷா பயன்படுத்தும் செல்போன் நெட்வொர்க்கை பயன்படுத்தி அவர் இருக்கும் இடத்தை காவல் துறையினர், நூதன முறையில் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். அண்ணனிடம் செலவுக்கு பணம் இல்லை என்று கூறி குறிப்பிட்ட ஏரியாவை கைகாட்டியவுடன் போதைக்கு அடிமையான இளைஞர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து கொடுப்பார்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதான இளைஞர்கள்

மேலும், கைதான சபியுல்லா செல்போன் மற்றும் செயின் பறிப்புக்காக தனது வாகனத்தை பிரத்தியேகமாக தயார் செய்து இளைஞர்களுக்கு கொடுப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களில் அஜய், விக்கி இருவரும் சமீபத்தில் தான் சிறையில் இருந்து வெளிவந்துள்ளனர். வந்தவுடன் கையில் காசு இல்லாததால் தி.நகர், கேகே நகர், வடபழனி சென்று வழிப்பறி செய்யுமாறு இன்ஸ்டா மூலம் ஆர்டர் கொடுத்தவுடன், கஞ்சா போதையில் வெறித்தனமாக 17 செல்போன் அடித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று அடையாறு காவல் மாவட்டத்திலும் கைவரிசை காட்டி செல்போன் பறிப்பு சம்பவங்களில் சையது யாமின் பாட்ஷா ஈடுபட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாவில் ஆர்டர், கஞ்சா போதையில் வழிப்பறிக் கொள்ளை உல்லாச வாழ்க்கை என வாழ்ந்த செல்போன் பறிப்பின் ரூட்டு தல சையது யாமின் பாஷாவின் கும்பலை சாதுரியமாக விசாரணை நடத்தி கூண்டோடு கைது செய்த தனிப்படை காவல் துறையினருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

சையது யாமின் பாஷாவிடம் அடிமையாக இருக்கும் வழிப்பறி கொள்ளையர்கள் எத்தனை பேர்? இதுவரை எத்தனை செல்போன்கள் மற்றும் செயின் பறிப்புகள் நடைபெற்றுள்ளது என்பது குறித்தெல்லாம் காவல் துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஏடிஎம் மையங்களில் நூதன திருட்டு - கூண்டோடு சிக்கிய கொள்ளையர்!

ABOUT THE AUTHOR

...view details