சென்னை:வங்ககடல் பகுதியில் புயல் சின்னம் வரும் 3 ஆம் தேதி உருவாக உள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் பல்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, பேரிடரை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று (டிச.1) முக்கியத் துறை அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், கூடுதல் தலைமைச்செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் புயலின் தாக்கம் மற்றும் கனமழையினை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பல்வேறு துறைகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
பல்வேறு முக்கியத்துறைகள் சார்பிலும், மாவட்ட நிர்வாகங்கள் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அலுவலகர்கள் இக்கூட்டத்தில் தெரிவித்தனர்.
தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா வழங்கிய அறிவுரைகள்:பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன் கூட்டியே நிவாரண மையங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முறிந்து விழக்கூடிய அபாயகரமான மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவதோடு, பலவீனமான மரங்களையும் அகற்ற வேண்டும்.
அதேபோன்று, பலவீனமான விளம்பரப் பலகைகள், மேற்கூரை உள்ள ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் ஆகியவற்றை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பலத்த காற்றின் காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற போதுமான இயந்திர மர அறுப்பான்கள் மற்றும் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மரம் விழும் நிகழ்வுகளிலும், கனமழையின் போதும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மெட்ரோ ரயில், பெருநகர சென்னை மாநராட்சி, சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மூலம் தோண்டப்படும் குழிகளுக்கு தடுப்பு ஏற்படுத்தி, விபத்துகள் நிகழ்வதைத் தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், போதுமான மோட்டார் பம்புகள் மற்றும் ஜெனரேட்டர்கள் வைத்திருப்பதோடு, பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.