சென்னை:தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பகுதிகளுக்கான போக்குவரத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழை பாதிப்புகள் குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதிக பட்சமாகத் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் 96 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வருகிறது. கடலோர பகுதிகளில் அதிக அளவு மழைப் பொழிவு இருக்கிறது. தூத்துக்குடியில் தேங்கும் மழை நீர் வடிய தாமதமாகலாம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் 84 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 425 பேர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 7 ஆயிரத்து 500 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளைப் பொருத்தவரை தூத்துக்குடியின் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார்.
மீட்புப் பணிகளுக்காக ராணுவம் மற்றும் கடற்படையின் உதவி கேட்டுள்ளோம். மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் சூலூர் விமானப்படைத் தளம் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது" எனத் தெரிவித்தார்.