சேகர் ரெட்டி வழக்கை முடித்து வைத்த சிபிஐ நீதிமன்றம்
சென்னை: சட்டவிரோதமாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாத வழக்கை முடித்து சிபிஐ நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.
வருமான வரித்துறையினர் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு காண்ட்ராக்டரும் தொழில் அதிபருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர், ஆடிட்டர் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களும், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும், 178 கிலோ தங்கம் உள்ளிட்ட சுமார் 247 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகத்தெரிகிறது.
இதன் மூலம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் சேகர் ரெட்டி, அவரின் கூட்டாளிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான 24 நாட்களில் எப்படி கோடிக்கணக்கான ரூபாய் மாற்றப்பட்டது என்பது குறித்து சரியாக சேகர் ரெட்டி உள்ளிட்டோர் பதிலளிக்கவில்லை.
இதுகுறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து சேகர் ரெட்டி, பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் உள்ளிட்டோரை கைது செய்தது.
ஆரம்பகட்ட விசாரணையின் முடிவில், மோசடியான வகையில் புதிய ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்பட்டது, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டத்துக்குப் புறம்பாக வருமானம் சேர்த்தது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் இவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள சிபிஐ காவல் துறை சார்பில், சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், சேகர் ரெட்டி உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து 170 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. 879 ஆவணங்களை ஆய்வு செய்ததின் மூலமாக இந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான போதுமான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் இல்லை.
எனவே, தொடர்ந்து இந்த வழக்கை நடத்துவதில் இருந்து கைவிடலாம் எனவும்; தொடர்ந்து வழக்கை நடத்தாமல் முடித்துக் கொள்ளலாம் எனவும் சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜவகர், சேகர் ரெட்டி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். மேலும் விசாரணைக்காலத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள், ஆவணங்களைத் திருப்பி அளிக்கவும் உத்தரவிட்டார்.