சென்னை:கோடம்பாக்கம் திருவாலீஸ்வரம் திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறையை (strong room) அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்துவைத்தார்.
அவருடன் எழிலன் எம்.எல்.ஏ துறை செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 22 சிலைகள் வைக்கும் அளவிற்கு கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்த பின்னர், அதன் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தினார்.
பாதுகாப்பு அறை
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “கோடம்பாக்கம் திருவாலீஸ்வரம் திருக்கோவிலில் உலோக திருமேனி பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. விலை மதிப்பு மிக்க சிலைகள் பாதுகாப்பாக இருக்க இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு சிலையை பாதுகாக்க 8 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 3087 கோயில்களில் திருமேனி பாதுகாப்பு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இரண்டு பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3085 பாதுகாப்பு அறைகள் விரைவில் அமைக்கப்படும்.
கோயில்களை சுற்றி இருக்கும் மதுபானக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்று முழுமையாக முடிந்தவுடன் பக்தர்களை பக்தி சுற்றுலா அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக பணியில் ஈடுபடவில்லை
சிதம்பரம் நடராஜர் கோயிலை பற்றி முக நூலில் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். நீதி மன்றத்தில் சிதம்பரம் கோயில் பற்றிய வழக்கு நடந்து கொண்டிருப்பதால், பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இறைவனை வழிபடும் வகையில் இந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.