சென்னை:சென்னையில் தற்போது மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்றைய சூழலில் பெண்கள் பணி நிமித்தமாக சொந்த ஊரிலிருந்து பல்வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து செல்கின்றனர். குறிப்பாக, பணிக்காக அதிகளவில் பெண்கள் சென்னையை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் பொது இடங்களில் பெண்களுக்கான கழிவறை பிரச்னைகள் கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும், பொது இடங்களில் இருக்கும் கழிவறைகளில் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதால், பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவே பெண்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, பேருந்து நிறுத்தங்கள் போன்ற இடங்களில் அவசர பணிக்காக வெளியில் செல்லும் பெண்களுக்காகவே சென்னையில் முதன் முதலாக பெண்களுக்கென நடமாடும் ஒப்பனை அறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் பெண்களின் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களில் நடமாடும் ஒப்பனை அறை வாகனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
நடமாடும் ஒப்பனை அறைகளில் இருக்கும் வசதிகள்: இந்த வாகனத்தில் கழிவறை, முகம் பார்க்கும் கண்ணாடி, சானிட்டரி நாப்கின், கை கழுவும் திரவம், உடை மாற்றும் சிறு அறை, தாய்ப்பால் ஊட்டும் அறை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இது குறித்து மேயர் ஆர்.பிரியா தெரிவித்ததாவது, "முதல் முறையாக சென்னை மாநகராட்சியில் பெண்களுக்காகவே நடமாடும் ஒப்பனை அறை வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதியத் திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திட்டம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்காக தூய்மை இந்தியா திட்ட சேமிப்பு நிதியின் கீழ், ரூபாய் 19.70 கோடி மதிப்பீட்டில், 14 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 44 கனரக காம்பாக்டர் வாகனங்கள் மற்றும் ரூபாய் 10.58 கோடி மதிப்பீட்டில் 8 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 30 இலகுரக காம்பாக்டர் வாகனங்கள் என மொத்தம் ரூபாய் 30.28 கோடி மதிப்பீட்டில் 74 காம்பாக்டர் வாகனங்கள் மற்றும் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிர்பயா திட்ட நிதியின் கீழ், ரூபாய்.4.37 கோடி மதிப்பீட்டில், 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனங்களின் செயல்பாட்டினை ரிப்பன் கட்டட வளாகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க:'மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எந்த வழக்குகளில் இருந்தும் விலகப்போவதில்லை' - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!