சென்னை: இஸ்லாத்தில் மனைவியரை விவாகரத்து செய்ய பின்பற்றப்பட்ட தலாக் நடைமுறையைப் போல, கணவரை விவாகரத்து செய்ய மனைவியருக்கு குலா என்ற நடைமுறை, ஷரியத் சட்டத்தில் உள்ளது. இந்நிலையில் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் தன்னை விவாகரத்து செய்து, மனைவி பெற்ற குலா சான்றிதழை ரத்து செய்யக் கோரி கணவர் ஒருவரின் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் ஷரியத் கவுன்சில் என்பது தனியார் அமைப்பு. பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் நீதிமன்றங்கள் அல்ல எனவும், அந்த அமைப்புகள் விவாகரத்து வழங்கி சான்றிதழ் வழங்க முடியாது எனக் கூறி, ஷரியத் கவுன்சில் மனைவிக்கு வழங்கிய குலா சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்டார்.