சென்னை: புரசைவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதரேசுவர் திருக்கோயிலில் இந்து அறநிலையத்துறையின் சார்பில் ராஜகோபுரம் உட்பட பல சீரமைத்தல் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். ராஜகோபுரம், சுற்றுப்பிரகாரம், கருங்கல் பதிக்கும் பணிகள், மின் பணிகள், நந்தவனம் சீரமைத்தல் முதலான பணிகளை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 6.30 கோடி செலவில் தங்கத்தேர் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. தங்கத்தேர்க்கான மரத்தேர் அமைக்க 31 லட்ச ரூபாய் செலவில் பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு மாத காலத்திற்குள் மரத்தேர் பணி நிறைவடைந்து, தங்கத்தேர் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், ஒரு கோடியே 27 லட்ச ரூபாய் செலவில் 5 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு உண்டான திருப்பணிகள் அடுத்த 8 மாதங்களுக்குள்ளாக முடிக்க நடவடிக்கை எடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். திமுக ஆட்சியில் தான் உபயதாரர்கள் மனமுவந்து தரும் தொகை முழுமையாக திருக்கோவிலுக்கு செய்யப்படுகிறது என உபயதாரர்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது.