சென்னை:தமிழ்நாட்டின் பல்வேறு துறைகள், அதிகாரிகள், அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் சார்ந்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முதன்மையான பணி ஆகும்.
இந்த ஆணையத்தில் அதிகாரமிக்க தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 ஆணையர் பொறுப்பிடங்கள், கடந்த நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, இதற்கான தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தேடுதல் குழு அமைக்கப்பட்டது.
தொடர்ந்து, இந்த தேடுதல் குழுவின் அறிக்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இரண்டு முறை புதிய தகவல் ஆணையர் தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தரை தேர்வு செய்து பரிந்துரை கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில்தான், குழுவின் இந்த பரிந்துரையை ஏற்று, தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக ஷகில் அக்தரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.