குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளை தொடர்ந்து போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் இந்தத் தடியடியில் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய சில நிமிடங்களில் தாம்பரம், ஆலந்தூர், புதுப்பேட்டை, மாதவரம், செங்குன்றம், அமைந்தகரை, மண்ணடி உள்ளிட்ட சென்னை நகரின் பல பகுதிகளில் பல்வேறு அரசியல் இயக்கங்கள் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர்.
மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக தஞ்சை, மதுரை, திருவாரூர், திருச்சி, கோவை, விழுப்புரம், திண்டிவனம், கடலூர், கள்ளக் குறிச்சி, திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், அரியலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பல்வேறு மாவட்டங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம், சாலை மறியல், கண்டனக் கூட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை, போராட்டக் களத்திலிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி நேற்று மீண்டும் மக்கள் தங்களது போராட்டத்தை தொடங்கினர்.