மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்க அனுமதியளிக்காத ஆளுநரைக் கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய பாஜக அரசு, மாநில அதிமுக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து ஆளுநர் புகைப்படம் வைக்கப்பட்டு, அதன் முன்பாக பேனாக்கள் வைக்கப்பட்டு 'கையெழுத்து இட பேனா இல்லையா ஆளுநரே?' என்று கேள்வி எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கம் மாநிலச் செயலாளர் மாரியப்பன் கூறுகையில், "மத்திய பாஜக அரசு இந்திய கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும்விதமாக தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.
நீட் தேர்வு 18 மாணவர்களின் உயிரைப் பறித்துள்ளது. தற்போது நீட் தேர்வுக்குச் சிறு ஆறுதலாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநரைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் ஆனால் 40 நாள்களுக்கு மேலாகியும் ஆளுநர் கையெழுத்து இடவில்லை. அவரின் செயல்பாடு தமிழ்நாடு மாணவர்களை வஞ்சிக்கக்கூடியது. தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
தமிழ்நாடு அரசு 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்குவதை அரசிதழில் வெளியிடுவதின் மூலம் ஆளுநர் அனுமதி தேவையில்லை எனச் சட்ட வல்லுநர்கள் தெரிவிப்பதை இந்திய மாணவர்கள் சங்கமும் ஆதரிக்கின்றது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'முதலில் அறிவிக்கப்பட்டவரே வெற்றியாளர்!'