சென்னை: அடையாறு பகுதியைச்சேர்ந்த பெண் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மடிப்பாக்கம் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அந்தப் புகாரில், ராம் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் ஒரு நபர் தன்னை இடித்து கீழே தள்ளியதாகவும், அப்பொழுது தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டதோடு, கடுமையாகத் தாக்கிவிட்டு ஆபாச வார்த்தைகளால் திட்டிவிட்டு தப்பியோடிச் சென்றதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகாரில் தெரிவித்திருந்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை உதவி ஆணையர் பிராங்கிளின் ரூபன் தலைமையில் உதவி ஆய்வாளர் நிர்மல், மணிமாறன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் குற்றவாளியைத் தேடி வந்த நிலையில் தமிழ்ச்செல்வன் என்கிற சரவணனை நேற்று கைது செய்தனர்.
போலீசார் வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சியின் அடிப்படையில், சரவணன் அந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து தாக்கி தள்ளி விடுவது பதிவாகியுள்ளது. பின்னர் அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தை தூக்கி நிறுத்தும் சரவணன், தன்னை நல்லவர் போல காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். ஆடைகளில் உள்ள கரைகளை அகற்ற உதவுவது போன்று நடிக்கும் சரவணன் அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.