சென்னை:New Year Celebration:தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை:
மேலும்,பண்டிகைக் காலங்களில் கரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் பொது மக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி, தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி இம்மாத இறுதி வரை தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் புத்தாண்டைத் தங்களின் வீடுகளிலேயே கொண்டாடுமாறு தமிழ்நாடு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல் வழிபாட்டுத்தலங்களில் தமிழ்நாடு அரசினால் அறிவுறுத்தப்பட்ட கரோனா நடத்தை வழிமுறைகளைப் பின்பற்றுமாறும், புத்தாண்டு தினத்தில் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் கூட்டம் கூடுவதையும், இரு சக்கர வாகனங்களில் சுற்றுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
புத்தாண்டு இரவில் மது அருந்தி வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும்;
அதிவேகமாக வாகனம் ஓட்டினாலோ, பைக் ரேசில் ஈடுபட்டாலோ கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
விபத்தில்லா புத்தாண்டைக் கொண்டாட வேண்டும்!:
நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் பயணம் செய்வதைத் தவிர்த்து, ரயிலிலும், பேருந்திலும் பயணிக்க காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.
ஹோட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் நெறிகளின்படி, இரவு 11 மணி வரை செயல்படும்.
ஹோட்டல் ஊழியர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என ஹோட்டல் நிர்வாகம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டினைக் குறித்து தகவலை அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவித்தால், ரோந்து காவலர்களின் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். இதனால் திருட்டுச் சம்பவங்கள் தவிர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் ரோந்து கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள்.
கண்ணியமற்ற மற்றும் அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவலர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் எனவும்; விபத்தில்லா புத்தாண்டை கொண்டாட வேண்டும் எனவும் கூறி, தமிழ்நாடு காவல்துறை சார்பில் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Go Back Modi : ட்விட்டர் திடீர் ட்ரெண்டிங்கில் 'கோ பேக் மோடி' பின்னணி என்ன?