சென்னை:சென்னை விமானநிலையத்தில் ரூ. 46.29 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் மற்றும் ரூ. 95.44 லட்சம் மதிப்பிலான 2.09 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருவாய் புலான்ய்வு இயக்குநரக (DRI) அலுவலர்களிடமிருந்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய்க்குச் செல்ல வந்த பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் தீவிரமாகச் சோதனை செய்தனர்.
அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஹரேஷ் பத்துமால் கங்வானி என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து பயணியின் உடைமைகளைச் சோதனை செய்தபோது அவரது உடமையின் கைப்பிடிகளில் ரூபாய் 46.29 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டுப் பணம் (யுஏஇ) மறைத்துக் கடத்தி செல்வது தெரியவந்தது. அவரை கைது செய்த சுங்கத்துறை அலுவலர்கள் வெளிநாடு பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் நேற்று (பிப். 19) காலை ஃபிளை துபாய் விமானத்தில் துபாயிலிருந்து வந்த பயணிகள் அனைவரும் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது ஐந்து பயணிகள் தங்களின் உடைமைகளில் 1.4 கிலோ தங்கக்கட்டிகளை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது.