சென்னை:மிக்ஜாம் புயலின் கோர தாண்டவத்தால், சென்னை முழுவதும் மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இப்புயலின் காரணமாக, சென்னை மாநகரில் பெய்த கனமழையின் நடுவே, பலரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று (டிச. 5) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பட்டினப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, மாநகர போக்குவரத்து கழக டிப்போ அருகில் இறந்து கிடந்த பெயர், விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் நபரின் உடல் கைப்பற்றப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
துரைப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாண்டியன் நகர், செல்வ விநாயகர் கோயில் தெருவில் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த கணேசன்(70) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பரத் (வயது 53) என்பவர் நொச்சிக்குப்பம் எல்லையம்மன் கோயில் தெருவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் உயிரிழந்தார்.
சூளைமேடு மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாவலராக பணியாற்றி வந்த செல்வம்(50) என்பவர் பள்ளி வளாகத்திற்குள் இருந்த மழைநீரில் இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருந்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
04.12.2023 அன்று, பிராட்வே BRN கார்டன் பகுதியைச் சேர்ந்த ஆனந்தபாபு (வயது 35) என்பவர் மீது பிரகாசம் சாலை & சாலை விநாயகர் கோயில் சந்திப்பு அருகே மரத்தின் கிளை ஒன்று விழுந்ததில், அவருக்கு தலையில் காயத்துடன் மீட்கப்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகரில் முருகன் (வயது 35) என்பவர் மீது மரம் விழுந்ததால் உயிரிழந்தார். கோட்டூர்புரம் மாநகராட்சி பள்ளி நிவாரண மையத்தில் தங்கியிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மிராஜுல் இஸ்லாம்(19) என்பவர் இன்று (டிச.5) வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தாமோதரன் (வயது 40) என்பவர் தனது வீட்டில் தேங்கியிருந்த மழைநீரில் இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்க காணப்பட்டார்.
5.12.2023 அன்று 0700 மணிக்கு உடல் நலமின்றி படுக்கையிலிருந்த மயிலாப்பூரைச் சேர்ந்த பெருமாள் (வயது 64) என்பவர், அவரது வீட்டில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.