சென்னை:சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில், மாநகராட்சிப் பள்ளிகளில் 2021 - 2022ஆம் கல்வியாண்டில் பயின்று உயர்கல்வியில் சேர்ந்துள்ள 285 மாணவ - மாணவியர்களுக்கு 67.39 லட்சம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு; மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்கினர்.
கடந்த 12 கல்வி ஆண்டுகளாக 7,254 மாணவர்களுக்கு ரூ.16.44 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 425 மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்க சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.90.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 285 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் மேடையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, 'வாழ்க்கை நமக்கு வாய்ப்பை மட்டும் தான் தருகிறது. வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் காலம் தான் மாணவப் பருவ காலம். வனப்பகுதியில் யானையைப்போல் வாழ்க்கையை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்திய ஒன்றிய மாநிலங்களில் எப்படி முதன்மையான முதலமைச்சர் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயர் எடுத்துள்ளரோ, அதைப்போல் தமிழ்நாடு மாணவர்கள் பெயர் எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் நேரு, 'சென்னை மாநகராட்சியில் புதிதாக மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி கட்ட வேண்டும் என ஆணையர் தெரிவித்திருந்தார். இதுபோன்று புதிதாக கல்லூரிகள் அமைவதின் மூலம் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு அதிக வாய்ப்பு கிடைக்கும்.
தற்போது மாநகராட்சி வழங்கும் ஊக்கத்தொகை மாணவர்களின் பெற்றோர்களுக்கு சற்று உதவியாக இருக்கும்’ எனத் தெரிவித்தார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என். நேரு, 'மழைக் காலத்திற்குள்ளாக சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் 70 - 80 % நிறைவுபெறும். தற்போது வரை சராசரியாக 50% மழை நீர் வடிகால் பணிகள் நிறைவுபெற்றுள்ளது.
சில இடங்களில் மரங்களை வெட்ட வேண்டும். சில இடங்களில் மின்சாரத்துறை கம்பங்களை எடுக்க வேண்டும் என பல்வேறு நடைமுறைச்சிக்கல்கள் உள்ளன. இதன் காரணமாகத்தான் பணிகள் சற்று தாமதமாக சென்று கொண்டிருக்கிறது.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை அம்மா உணவகம் மூலமாக செயல்படுத்த மாநகராட்சி கோரிக்கை வைத்துள்ளது ஆய்வில் உள்ளது. முதலமைச்சர் என்ன உத்தரவு பிறப்பிக்கிறாரோ அதன்பேரில் திட்டம் செயல்படுத்தப்படும்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அரசு கலைக்கல்லூரிகளில் உதவிப்பேராசிரிகளுக்கு தர ஊதிய உயர்வு ஏன் வழங்கவில்லை.. ராமதாஸ் கேள்வி